×

கடல் வழியாக கடத்திய ₹6 கோடி கஞ்சா ஆயில் மூலப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

மண்டபம்: தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்திய ரூ.6 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் தயாரிப்பில் பயன்படுத்தும் மூலப்பொருட்களை நடுக்கடலில் ரோந்து பணியின்போது இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக அந்த நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தலைமன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நாட்டுப்படகை இலங்கை கடற்படையினர் சோதனை செய்தனர். அப்படகில் 92 கிலோ கஞ்சா ஆயில் மூலப்பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த கடற்படையினர், படகில் இருந்த 3 பேரை கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், கைதானவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள வேதாளையைச் சேர்ந்த புர்ஹான் (48), ரஹ்மான் அலி (42), கஜினி முஹமது (36) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் கஞ்சா பொருட்களை வேதாளை தென்கடற்பகுதியில் இருந்து படகில் ஏற்றி, தனுஷ்கோடி வழியாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மன்னாருக்கு கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணைக்கு பின் 3 பேரும் கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பறிமுதல் செய்த கஞ்சா ஆயில் மூலப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடி என இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

The post கடல் வழியாக கடத்திய ₹6 கோடி கஞ்சா ஆயில் மூலப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Sri Lanka ,Dhanushkodi ,Dinakaran ,
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...